இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை சேர்த்து நாம் எழுதும்போதோ அல்லது சொல்லும் போதோ ஆகிய, போன்ற என்கின்ற சொற்களை நாம் பயன்படுத்துகின்றோம்.
இந்த சொற்களை எதற்காக நாம் எங்கெங்கு பயன் படுத்துகின்றோம் என பார்க்கலாம்.
உதாரணமாக ,
ரோஜா, மல்லிகை, சாமந்தி ஆகிய பூக்களை கொண்டு இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு நாம் ஆகிய என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளோம்.
இதற்கு இந்த மூன்று பூக்களை மட்டும் பயன்படுத்தி தொடுக்கப்பட்டது இந்த மாலை என்று பொருள். அதோடு அதற்கு மேல் வேறு எந்த பூக்களும் இந்த மாலையில் இல்லை என உறுதிபட சொல்வதற்கு ஆகிய எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு தொகுப்பில் பயன்படுத்தப்படும் அனைத்துப்பொருட்களையும் எடுத்தாளும்போது (ஆகிய) பயன்படுத்த வேண்டும்.
அதேபோன்று ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்ற பூக்களை கொண்டு இந்த மாலை தொடுக்கப்பட்டுள்ளது.
இது இன்னொரு வடிவம். அதாவது முதலில் ஆகிய என்ற சொல்லை பயன்படுத்தினோம். அதேபோல இங்கு போன்ற என்கின்ற சொல்லை பயன்படுத்தியுள்ளோம். இதன் அர்த்தம் ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்ற மேலும் சில பூக்கள் இந்த மாலையில் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்று பொருள்.
அதேபோன்று பலவற்றை வரிசையாக சொல்லும்போது ( முதலிய ) எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது பேருந்து, ரயில் முதலிய வாகனங்கள் ... எனும்போதும், குதிரை, நாய், பூனை முதலிய வீட்டு விலங்குகள் என நாம் குறிப்பிடும்போது இச்சொல் பயன்படுதப்படுவதை அவதானிக்கமுடியும்
ஒரு தொகுப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கூறாமல் , குறிப்பிட்டவற்றை மட்டும் சொல்லி ஒரு வாக்கியத்தினை அமைக்கும்போது, (போன்ற) எனும் சொல்லை பயன்படுத்தவேண்டும்.
அதற்கு மேலும் அந்த வரிசை நீள்கின்றது என்பதை சொல்லும் போது முதலிய எனும் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
COMMENTS